பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் இயங்கவில்லை என அதன் பயனர்கள் ட்விட்டரில் தெரிவித்தனர்.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் மீண்டும் கோளாறு ஏற்பட்டது. உலகம் முழுக்க இரு சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்தனர். சில மணி நேரங்கள் இடையூறு ஏற்பட்டதை தொடர்ந்து சேவைகள் சரி செய்யப்பட்டன.
சில நாட்களுக்கு முன் மெசன்ஜர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் சுமார் ஆறு மணி நேரம் முடங்கி போனது. அந்நிறுவன வரலாற்றில் முதல் முறையாக சேவைகள் பல மணி நேரம் முடங்கி போயின. இதன் காரணமாக அந்நிறுவனம் பல ஆயிரம் கோடி இழப்பை சந்தித்தது.
இந்திய நேரப்படி நேற்று (அக்டோபர் 8) நள்ளிரவு 11.50 மணி முதல் அக்டோபர் 9 அதிகாலை 2.20 மணி வரை சேவைகள் முடங்கியதாக தனியார் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் இன்ஸ்டாகிராம் செயலியின் அம்சங்கள் சீராக இயங்கவில்லை.
இரு சேவைகள் முடங்கியதை அடுத்து பயனர்கள் ட்விட்டரில் இன்ஸ்டாகிராம் டவுன் எனும் ஹேஷ்டேக் மூலம் சேவைகள் முடங்கியதாக குற்றம்சாட்டினர். இதனால் #instagramdown மற்றும் #instadown எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலானது.
பின் பேஸ்புக், ‘எங்களின் சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்,’ என தெரிவித்தது.